IT Impress Tamil Newsஞாயிற்றுக்கிழமை, 8 நவம்பர் 2026
சமீபத்தியம்

சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் அரசின் தலையீடு ஜனநாயக விரோதம் - சஜித்

சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் அரசின் தலையீடு ஜனநாயக விரோதம் - சஜித்
சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில் அரசின் தலையீடு ஜனநாயக விரோதம் - சஜித் படம்: Thushari Pahalage (CC BY-SA 4.0)

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கங்களை மாற்றுமாறு அரச தரப்பினால் விடுக்கப்படும் அழுத்தம், நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையின் சுயாதீனத்தில் மேற்கொள்ளும் தேவையற்ற மற்றும் ஆபத்தான தலையீடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06.11.2026) சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைத்து ஆற்றிய அவசர உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, முஜிபுர் ரஹ்மான் மற்றும் சானக மாதுகொட ஆகியோர் சிறப்புரிமைப் பிரச்சினைகளை சபையில் முன்வைத்ததாகவும், சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டாகக் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது தன்னிச்சையாக நிராகரித்தமையே இதற்குப் பிரதான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் கீழ் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய கட்டமைப்புகளின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடித்தளம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.